நியூயார்க்,
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள செய்தியில், சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகமான வியாழனில் காணப்படும் கிரேட் ரெட் ஸ்பாட் எனப்படும் பெரிய சிவப்பு புள்ளியானது சுருங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இது ஏன் என்று ஒருவராலும் கூற முடியவில்லை. வியாழன் கிரகத்தில் காணப்படும் இந்த பெரும் புள்ளியை விண்வெளியில் இருந்து நாம் பார்க்கலாம்.
கடந்த 1800ம் ஆண்டில், இந்த சிவப்பு புள்ளி 41 ஆயிரம் கி.மீட்டர் அகலத்துடன் முட்டை வடிவத்தில் இருந்தது. ஆனால், தற்பொழுது, வட்ட வடிவில் 16,500 கி.மீட்டர் அளவு கொண்டதாக உள்ளது. மேலும், வருடத்திற்கு 933 கி.மீட்டர் என்ற அளவில் அது சுருங்கி வருகிறது.
இது குறித்து பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மைக்கேல் வாங் கூறும்போது, இந்த புள்ளி ஒரு மர்மமானது. இது ஏன் சிவப்பு நிறமாக இருக்கிறது அல்லது சுருங்கி வருகிறது என விண்வெளி வீரர்களுக்கு தெரியாது. அடுத்த என்ன நடக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியாது.
இது தொடர்ந்து இந்த வேகத்தில் நீடித்தால் 17 வருடங்களில் அது முற்றிலும் மறைந்து விடும். அல்லது ஒரு சிறிய அளவில் அது நின்று விடும் என்று தெரிவித்துள்ளார். வாங் கூறுகையில், அந்த புள்ளி சிறிய புயல்களை தன்வசம் இழுத்து வைத்து கொள்கிறது. அவற்றில் சிலவற்றை தன்னுள் வாங்கி கொள்கிறது. எதுவாக இருப்பினும், பார்ப்பதற்கு அது அழகாக தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
0 comments
Readers Comments